அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 14 ஜூன், 2011

பனிக்கட்டிகளிலிருந்து தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முயற்ச்சி

ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகளை கப்பல் மூலம் கட்டி இழுத்து தேவையான இடங்களுக்குக் கொண்டு சென்று தண்ணீர் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஜார்ஜஸ் மோகின்(86). இவர் கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்கு ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள மலை போன்ற பனிக்கட்டிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த 1977ல் சவுதி அரேபியாவின் அப்போதைய இளவரசர் அல் பைசலுடன் இணைந்து "ஐஸ்பெர்க் டிரான்ஸ்போர்ட் இன்டர்நேஷனல்" என்ற அமைப்பைத் துவக்கினார். அதன் பின் பனிக்கட்டிகளை இழுத்து வருவது குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கினார்.எனினும் அக்கால கட்டத்தில், தொழில்நுட்பம் அவ்வளவாக முன்னேறாததால் அவரது குறிக்கோள் நிறைவேறுவதில் பல தடங்கல்கள் எழுந்தன. தற்போது பிரான்சை சேர்ந்த "டசால்ட் சிஸ்டம்ஸ்" என்ற நிறுவனம் ஜார்ஜசின் குறிக்கோளை முப்பரிமாணப் படங்கள் மூலம் நிறைவேற்றித் தந்துள்ளது. இதில் பனிக்கட்டியின் பயணத்தின் போது ஏற்படக் கூடிய இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ஆராயப்பட்டுள்ளன.

கனடாவின் நியூபவுண்ட்லேண்ட் என்ற இடத்தில் உள்ள 70 லட்சம் டன் எடை கொண்ட பனிக்கட்டியை ஆப்ரிக்காவை ஒட்டியுள்ள ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கேனரி தீவுகளுக்குக் கொண்டு வருவதுதான் ஜார்ஜசின் முதல் திட்டம்.
டசால்ட் சிஸ்டம்ஸ் உருவாக்கியுள்ள முப்பரிமாணப் படங்களின்படி பனிக் கட்டியைச் சுற்றி ஒரு பெல்ட் கட்டப்படும். பயண வழியில் பனிக்கட்டி உருகாமல் இருக்க அதன் மேற்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் இருக்கும் பகுதியின் மீது வலை கட்டப்படும்.
இரு இடங்களுக்கிடையிலான 4,726 கி.மீ தூரத்தை 141 நாட்களில் கப்பல் கடக்கும். வழியில் பனிக்கட்டியில் 38 சதவீதம் மட்டும் உருகியிருக்கும். கடல் காற்றின் போக்கிலேயே பனிக்கட்டியை கப்பல் இழுத்துச் செல்லும். செல்லும் வழியில் நீர்ச் சுழிகள், கடல் புயல் போன்றவை நேரிட்டால் அவற்றைச் சமாளிக்கக் கூடிய முன்னேற்பாடுகளும் இந்த முப்பரிமாணப் படங்களில் காட்டப்பட்டுள்ளன.
அதோடு குறைந்த எரிபொருள் செலவில் குறைந்த முயற்சியில் அதிகளவு பலனை அடைவதற்கும் இப்படங்கள் வழிகாட்டுகின்றன. விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்கள், பனிக் கட்டியைச் சுற்றி விடப்பட்டுள்ள மிதவைகள், பலூன்கள் இவை மூலம் பனிக்கட்டியின் பயணம் கண்காணிக்கப்படும்.
அதோடு, வானிலை, கடலின் உப்புத் தன்மை, காற்று இவையும் கணிக்கப்பட்டு அதற்கேற்ப பயணம் மாற்றியமைக்கப்படும். அளவில் சிறிய பனிக்கட்டி ஒன்றை இழுத்துக் கொண்டு வர 13 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதால் அதைத் திரட்டும் பணியில் ஜார்ஜஸ் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நிதி திரட்டிய பின் அடுத்தாண்டில் தன் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் முழுவேகத்தில் இருக்கிறார் ஜார்ஜஸ்.

நன்றி :  newsonews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக