அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 29 ஜூன், 2011

இத்தா

சில முஸ்­லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர். நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர். இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே அது பற்றிய விபரங்களை காண்போம்.

கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். மேலும் திருமண ஆசையைத் தூண்டக்கூடிய அலங்காரங்களை செய்யக்கூடாது. இந்த கால கட்டமே இத்தா எனப்படும்.
கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்கள் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், அவர்கள் மறுமணம் செய்யக்கூடாது.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (2 : 234)

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அல்குர்ஆன் (2 : 228)

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.

அல்குர்ஆன் (65 : 4)
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக்கெடுவிலிருந்து கர்ப்பினிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்பதை மேலுள்ள வசனத்திலிருந்து அறியலாம்.

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது. கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.

இத்தாவின் போது அலங்கரித்தல் கூடாது

இத்தா இருக்கும் பெண்கள் நறுமணம் பூசுதல் கண்களுக்கு சுர்மா இடுதல் மருதாணி பூசுதல் போன்ற அலங்காரங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து உடலையும் கூந்தலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. கூடுதலான அலங்காரங்களையும் ஒப்பனைப் பொருட்களையும் அதாவது மேக்கப் பொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட  (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணவனை இழந்தப் பெண் குங்குமப்பூச் சாயம் பூசப்பட்ட ஆடை மற்றும் சிவப்பு நிற ஆடையை அணியக்கூடாது. இன்னும் அவள் மருதாணி பூசக்கூடாது. அஞ்சனம் (அதாவது சுர்மா) இடுவதும் கூடாது. அறிவிப்பவர் : உம்மு சலமா (ர­லி) நூல் : நஸயீ (3479)

இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?


இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள் தாராளமாக வெளியில் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் வீணாக ஊர் சுத்துவது கூடாது.
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (‘இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், ”ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி­) நூல் : முஸ்லி­ம் (2972)
 
நன்றி : தவ்ஹீத் முழக்கம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக