அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 8 ஜூன், 2011

2030ல் கடும் உணவுப்பஞ்சத்தை உலகம் சந்திக்கும் : சர்வதேச நிறுவனம் எச்சரிக்கை

லண்டன் :  வரும் 2030ம் ஆண்டுக்குள், உலகளவில், முக்கிய உணவுப் பொருட்களின் விலை, இரு மடங்காக உயரும் அபாயம் இருப்பதால், உலக நாடுகளின் தலைவர்கள், விவசாய உற்பத்தியைப் பெருக்க விரைந்து செயல்பட வேண்டும்' என, சர்வதேச நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

சர்வதேச நிறுவனமான, "ஆக்ஸ்பாம்,' வறுமை மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்நிறுவனம், சமீபத்தில், "வளரும் வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்னும் 20 ஆண்டுகளுக்குள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, 120 சதவீதம் முதல் 130 சதவீதம் வரை அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தால், விளைச்சலில் ஏற்படும் மாற்றங்களே, இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும். இன்றைய நிலையில், உலகளவில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள், தாங்கள் அன்றாடம் பெறும் கூலியில், 80 சதவீதத்தை, உணவுக்காகவே செலவிட வேண்டியுள்ளது.

உற்பத்தி குறைந்து கொண்டே வருவதால், 2050ல், உணவுப் பற்றாக்குறை, 70 சதவீதமாக அதிகரிக்கும். 1990ல் இருந்தே, உணவு உற்பத்தி பாதியாகக் குறைந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு ஒரு சதவீதமாக, அது குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொருவருக்கும் குறைவில்லாத அளவு உணவு அளிக்கக் கூடிய ஆற்றல் இருந்தும் கூட இன்றைய நிலையில், ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் அவதிப்படும் அவலம் நிலவுகிறது.

கிழக்கு ஆப்ரிக்காவில் மட்டும், 80 லட்சம் மக்கள், உணவுப் பற்றாக்குறையால் அல்லல்படுகின்றனர்.உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளால், மிக மோசமான ஒரு காலகட்டம் உருவாகும். அதை நாம் தவிர்க்க வேண்டும் என்றால், பருவ நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் உலக நாடுகளின் தலைவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும். இவ்வாறு "ஆக்ஸ்பாம்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தாளம்நியூஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக