அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 17 ஜூன், 2011

பரிணாமக் கோட்பாடு (Evolution Theory) - 9

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......


وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِّن مَّاءٍ  ۖ فَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ بَطْنِهِ وَمِنْهُم مَّن
يَمْشِي عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ أَرْبَعٍ ۚ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரால் படைத்தான்.அவற்றில் வயிற்றால் நடப்பவை உள்ளன.இரு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன.நான்கு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன.தான் நாடியதை அல்லாஹ் படைப்பான்.அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.(அல்-குர்ஆன் 24:45)

பாம்பென்றால் படையும் நடுங்கும்என்பார்கள். அவ்வளவு பயம்! உண்மையில் தரையில் உடலை வளைத்து வளைத்து ஊர்ந்து செல்லும்போது பாம்பின் தோற்றம் மிகவும் அழகானது. இது வழுவழுப்பான நீண்ட உடற் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது.

உலகில் 3100 வகைப் பாம்புகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஏனையவற்றிலிருந்து பண்புகளிலும் வாழுமிடங்களிலும் நிறங்களிலும் மாறுபட்டவை. பாம்புகளில் மிகவும் கொடியனவாக நல்ல பாம்பு, கருநாகம், கண்ணாடி விரியன், கட்டுவிரியன் மற்றும் அனகொண்டா (Anaconda) போன்றன கருதப்படுகின்றன.


பொதுவாகப் பாம்புகள் குளிர்ப்பிரதேசம் தவிர்ந்த மற்றைய எல்லாப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன. நிலம், நீர், காடு, பாலைவனம், நிலக் கீழ் வலைகள் என்பனவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். பாம்பு குளிர்ந்த இரத்தமுடைய ஒரு பிராணி என்பதனால் சூழல் குளிராகும்போது இதன் உடல் வெப்பம் மிகவும் குறைந்து செல்கிறது. இதனால் இவை இறக்க நேரிடுகின்றன. எனவேதான் குளிர்பிரதேசத்தில் இவை வாழ்வதில்லை.


சாதாரணமாகப் பாம்புகள் மீன் தவளை முட்டை, பறவை, முயல், எலி போன்றவற்றையே உட்கொண்டு வாழ்கின்றன. ஆனால் நாகப்பாம்பு ஏனைய சிறு பாம்புகளையும் விழுங்கிவிடுகின்றது. அதேபோன்று பெரிய மலைப்பாம்பு அதனையும் விடப் பெரிய மான் போன்ற விலங்குகளை உட்கொள்கின்றது.

நாம் உடைமாற்றுவதுபோன்று பாம்புகளும் தம் உடைகளை மாற்றுவதை நீங்கள் கண்டதுண்டா? இதன் உடலில் ஒருவகை மெல்லிய பாலித்தீன் போன்ற தோல் (Skin) காணப்படுகின்றது. கரடு முரடான நிலப்பரப்பில் போகும்போது அவற்றுக்குச் சேதம் ஏற்படாதவாறு அல்லாஹ் இவ்வாறு அமைத்துள்ளான்.

இவ்வுறைக்குரிய கலங்கள் (Cells) இறக்கும்போது புதிய கலங்கள் உற்பத்தியாகின்றன. எனவே இறந்த கலங்களை அகற்றுவதே  இச்செயற்பாடாகும்.இது Moulting எனப்படுகின்றது.பாம்பு தனது மூக்குப்பகுதியை சொர சொரப்பானதொரு பகுதியில் தேய்த்து சற்று உரித்துக் கொள்கிறது.பின்பு உரிந்த பகுதியை எங்காவது சிக்கச்செய்கின்றது.அதன்பின் தனது உறையைக் களட்டியவாறு மெதுமெதுவாக முன்னோக்கிச் செல்கின்றது.

உலகிலே மகிப் பெரிய பாம்பு தென் அமெரிக்க அனகொண்டாவும் வரிவரிகொண்ட ஆசிய மலைப்பாம்புமாகும். அனகொண்டா சுமார் 35 அடி நீளம் கொண்டது.இது அமேசான் காட்டிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.இப்பாம்பு ஒரு முறையில் 33 குட்டிகள் ஈணும். அண்மையில் விலங்கியல் ஆய்வாளர்கள் கரீபியன் தீவொன்றிலிருந்து உலகிலேயே மிகச் சிறிய பாம்பினத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது சுமாராக 10cm நீளத்தைக் கொண்டது. ஆய்வாளர்கள் இதற்கு Leptotyphiops   என்றும் Carlae என்றும் பெயரிட்டுள்ளனர்.பாம்புகளில் மிகவேகமாக ஊர்ந்து செல்லக்கூடியது ஆபிரிக்கக் கறுப்பு மம்பாஎனும் பாம்பாகும். இது மணிக்கு 11Km வேகத்தில் செல்லும்.

பாம்பு என்று கூறும்போது அனைத்துமே விஷமுடையவை என்று கூறமுடியாது.இதுவரை ஆராய்ந்துள்ள 2700 வகைப் பாம்புகளில் 9 வீதமானவையே விஷமுடைய பாம்புகளென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை தமது எதிரியைத் தாக்கவே விஷப்பல்லைப் பயன்படுத்துகின்றன. பாம்பு தீண்டும் அதேகணத்தில் அதன் பல்லின் மூலம் விஷத்தையும் கக்குகின்றது. 

பாம்பின் தலையின் இரு பக்கத்திலும் கண்களுக்குச் சற்று கீழாக நச்சுச் சுரப்பிகள் (Poison Glands)  காணப்படுகின்றன.மேல்த்தாடைக்குக் கீழே இருபுறமும் இரு விஷப்பற்கள் காணப்படுகின்றன. இப்பற்களின் நடுப்பகுதி துவாரமாக இருக்கும்.விஷச் சுரப்பிகளிலிருந்து விஷம் இப்பற்களின் துவாரங்களினூடாகவே செலுத்தப்படுகின்றது. இவையல்லாது 8அடி முதல் 10அடி வரையான தூரத்திற்கு விஷத்தைக் குறிபார்த்துத் துப்பி எறியக்கூடிய ஒருவகை நல்லபாம்புகளும் இருக்கின்றன.பாம்பின் விஷம் மணமற்ற ஒளி ஊடுருவாத வெளிர் மஞ்சல் நிறமுடைய திரவமாகும். இதில் 30 வீதமானது அதிக நச்சுத்தன்மை வாய்ந்த புரதப் பொருட்களாகும்.


உண்மையில் பாம்பின் விஷம் மிகவும் ஆபத்தானது.இதன் விஷம் இரத்தத்தில் கலக்காதவரை உயிருக்கு ஆபத்தில்லை. அப்படிக் கலந்துவிட்டால் அது தனது வேலையைத் துரிதமாக ஆரம்பிக்கும். நல்ல பாம்பின் விஷம் மூளையையும் முதுகெலும்பையும் பாதிக்கச்செய்கின்றது. பாம்பு கடித்து 1-12 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ வாய்ப்பிருக்கின்றது.இவ்விஷத்தால் ஒரு யானையைக்கூட கொன்றுவிடமுடியும்.

முட்டையிடுவனவென்றும் குட்டியீணுவனவென்றும் பாம்புகளை இருவகைப்படுத்தலாம்.ஒரே தடவையில் 6 முதல் 30 வரை முட்டைகளிடும் பெரிய மலைப்பாம்புகளும், ஒருதடவையில் 100 குட்டிகளையீணும் வேறுவகைப் பாம்புகளும் காணப்படுகின்றன.

நாம் விதவிதமான நிறங்களில் பல்வேறு பாம்புகளைக் கண்டிருக்கின்றோம். இந்நிறங்கள் யாவும் அவை வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலேயே அல்லாஹ் அவற்றைப் படைத்துள்ளான். உதாரணமாக, பாலைவனப் பாம்புகள் பாலைவன மணலின் நிறத்திலும் கொம்பேரி மூக்கன் எனும் கண்கொத்திப் பாம்புகள் அடர்ந்த பச்சை மர இலைகளுக்கு மத்தியில் வாழ்வதால் பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம். 

அல்லாஹ் வழங்கியுள்ள இவ்விஷேச வடிவமைப்பானது அவற்றால் தமது இரையைச் சுலபமாகப் பற்றிக்கொள்ளவும் பருந்து, பன்றி கீரி போன்ற ஏனைய எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் வசதியாயுள்ளது.

இதிலிருந்து நிம்மால் அல்லாஹ்வின் திட்டமிட்ட, மகத்துவமான வல்லமையைப் புரிந்துகொள்ளமுடியும்.அல்லாஹ் பெரும் ஆற்றலுடையவன்,  அறிவுமிக்கவன்.


 
நன்றி : ஆலிப் அலி

தொடரும் இன்ஷா அல்லாஹ்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக