அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

பேச்சின் ஒழுங்குகள் (பாகம்-2)

தீய பேச்சுக்கள் வேண்டாம்

கெட்ட பேச்சுக்களைப் பேசுவது இறை நம்பிக்கையாளனிடம் இருக்கக் கூடாத பண்பாகும்.மானக்கேடான அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வது நல்லவர்களின் பண்பல்ல என்று இறைவன் கூறுகிறான்.சிலர் அசிங்கமான, இரு பொருள் தருகின்ற வார்த்தைகளைப் பேசி மகிழ்கிறார்கள்.அந்த வார்த்தை ஆபாசத்தை எடுத்துக் காட்டாவிட்டாலும் அதைக் கொண்டு தவறான அர்த்தத்தை நாடுகிறார்கள்.இப்படி மறைமுகமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

''வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!  அல்குர்ஆன் (7:33)

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான்.வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான்.நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.அல்குர்ஆன் (16:90)
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள்.   

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும்.கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். 
அறிவிப்பவர்: அபூஉமாமா (ர­லி) நூல்: திர்மிதி (1950)
 
நாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது.எத்தனையோ மோசமான வார்த்தைகள் நாவில் தவழுகின்றன.இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதாரண பேச்சுக்களைப் போல் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் நாம் விடும் வார்த்தைகள் நமக்கு அற்பமானதாகத் தெரிந்தாலும் அது இறைவனுடைய பார்வையில் படு மோசமானதாகக் கருதப்படலாம்.அதனால் நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கிய நிலையைக் கூட எய்தலாம்.எனவே சிறிய கெட்ட வார்த்தை, பெரிய கெட்ட வார்த்தை என்றெல்லாம் பாகுபடுத்தாமல் தீயதை முழுமையாகத் தவிர்ந்து கொள்வதே ஏற்புடையது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான்.ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார்.அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)  நூல்: புகாரி (6478)
அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.பேசும் வார்த்தை சரியாக இருந்தாலும் ஒரு ஆணிடத்தில் அதிகமாகப் பேசுவது தீய எண்ணத்தை அவன் மனதில் வளர்க்கும். பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுபவர்களாக இருக்கும் போது இருவருக்கும் மத்தியில் பேச்சுத் தொடர்ந்தால் அது நாளைடைவில் தவறான தொடர்பாக உருவெடுத்து விடும்.

பெண் அவ்வாறு நினைக்காவிட்டாலும் சாதாரண ஒவ்வொரு ஆணுடைய எண்ணமும் இப்படித் தான் இருக்கும். நபிமார்களின் மனைவியருக்கு இவ்வாறு அல்லாஹ் உபதேசிக்கிறான்.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.  அல்குர்ஆன் (33:32)
மோசமான மனிதர்
கெட்ட வார்த்தைகளைப் பேசுபவர்களிடத்தில் பேச்சுக் கொடுக்க நல்லவர்கள் பயப்படுவார்கள்.நல்லவர்கள் முன்னிலையில் கேட்க முடியாத வார்த்தையைச் சொல்­லிவிட்டால், சொல்பவர்களுக்குக் கூச்சமாக இல்லாவிட்டாலும் அதைக் கேட்கும் நாகரீகமானவர்களுக்கு நெருடலாக இருக்கும்.இதனால் கெட்ட வார்த்தைகளைப் பேசுவர்களிடம் பேசுவதை நல்லவர்கள் தவிர்த்துக் கொள்வார்கள். தான் பேச்சைத் துவங்காவிட்டாலும் அவர்களாகத் துவக்கி விடுவார்கள் என்பதற்காக தீய வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் இருக்கும் சபைக்கும் வர நல்லவர்கள் அஞ்சுவார்கள்.
தீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்.அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள்.அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள்.உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள்.(அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்.பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளி­ருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்'' (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)என்றார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)  நூல்: புகாரி (6054)
சத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி(ஸல்)அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களைத் தலைவராக சமுதாயம் ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய காரணமாகும்.
நபி(ஸல்)அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை.

''உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!'' என்று அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி)  நூல்: புகாரி (3559)

ஆதாரமற்ற பேச்சுக்கள்

மணிக் கணக்கில் பேசும் பேச்சுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதாரமற்ற பேச்சுக்களாகவே இருக்கின்றன.சம்பவத்தை நேரடியாகக் கண்டிருக்க மாட்டார். ஆனால் கண்ணால் கண்டதைப் போல் மற்றவரிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.
'நீ கண்ணால் பார்த்தாயா?' என்று கேட்கும் போது சற்றுத் தடுமாறி, 'இல்லை! இன்னார் தான் இப்படிச் சொன்னார்' என்று கூறுகிறார்.
சொல்லப்பட்ட செய்தி சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல், தனக்கு நெருடலை ஏற்படுத்தாமல் இருந்தால் உடனே அதை பரப்பி விடுகிறார்.இதைக் கேட்பவர்களும் இதுபோன்றே நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் தீர விசாரிக்காமல் கேட்டவுடன் நம்பி விடுகிறார்கள்.இதே நிலை தொடர்ந்தால் நரகப் படுகுழியே பரிசாகக் கிடைக்கும்.

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள்.அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. 
அல்குர்ஆன் (24:15)
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 'இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்' (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ர­லி)யின் எழுத்தாளர்  நூல்: புகாரி (1477)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும். 
அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ர­லி)  நூல்: முஸ்­லிம் (6)
சாதாரண குற்றமல்ல!
ஆபாச வார்த்தைகளைப் பேசுவது விபச்சாரத்திற்கு நிகரானது. மர்ம உறுப்பு மட்டும் தான் விபச்சாரத்திற்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆபாசமான பேச்சுக்களைப் பேசுவதும் விபச்சாரத்திற்குக் காரணமாக அமைகிறது. எத்தனையோ பல விபச்சாரங்கள் தீயவற்றைப் பேசுவதி­ருந்தே தொடங்குகின்றன. பேசுகின்ற கெட்ட வார்த்தைகள் விபச்சாரத்தைத் தூண்டினாலும் வேறுவிதமாக அமைந்தாலும் தீயது என்ற வட்டத்திற்குள் வந்து விட்டால் நாவு விபச்சாரம் செய்ததாகப் பொருள் என்று பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வை,நாவு செய்யும் விபச்சாரம்  (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகின்றது. 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி (6243)

விபச்சாரம் என்ற குற்றத்தை மிக ஒழுக்கக் கேடான செயல் என்று சமுதாயம் நினைக்கிறது. இக்குற்றத்திற்கு தண்டனையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆனால் தவறான பேச்சுக்கள் இது போன்று கருதப்படுவதில்லை. சொல்லப் போனால் அதைப் பாவம் என்று கூட நினைக்காமல், பொழுதுபோக்காக எண்ணப்படுகிறது.இஸ்லாம் மார்க்கம் மட்டுமே தவான பேச்சுக்களை விபச்சாரத்திற்கு நிகராக ஒப்பிடுகிறது.
மர்ம உறுப்பைக் காக்காதவன் சொர்க்கம் செல்ல முடியாததைப் போல் நாவைக் காக்காதவனும் சொர்க்கம் செல்ல இயலாது.இந்த இரண்டையும் பாதுகாக்கத் தவறியவன் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வது நபி (ஸல்) அவர்களால் கூட முடியாத விஷயம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ன் நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ன் மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.  
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர­லி)  நூல்: புகாரி (6474)
 
உறுப்புகளால் செய்யும் தீய செயல்கள் குற்றங்களாகக் கருதப்படுகிறது.நாவில் எழும் அசிங்கமான வார்த்தைகள் இது போன்று கருதப்படுவதில்லை.இந்த எண்ணத்தில் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம், நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா? என்று கேட்ட போது, நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ''அல்லாஹ்வின் நபியே! ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ''மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்'' என்று கூறினார்கள்.  
அறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ர­லி)  நூல்: அஹ்மத் (21008)

உண்மையை உடைத்துப் பேச வேண்டும்
உண்மையைப் பேசுவதற்கு யாருக்கும் அஞ்சக்கூடாது. நாட்டின் அரசனை எதிர்த்துப் பேசுவது என்பது சாதராண ஒன்றல்ல. அவ்வாறு பேசினால் ஆளுபவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சகல அதிகாரமும் அவன் கையில் இருக்கிறது.
இவ்வளவு வ­ல்லமையைப் பெற்றவன் உண்மைக்குப் புறம்பாகச் செல்லும் போது சத்தியத்தை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறெதற்கும் சக்தி இல்லாத ஒருவர் அவனிடத்தில் நியாயத்தைக் கேட்பது மிகப் பெரிய ஜிஹாத் ஆகும்.நமக்கு வேண்டியவர்கள், நமக்கு மேல் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு நல்லதை எடுத்துச் சொல்வதற்கே பயப்படுகின்ற நாம் எப்படி ஆட்சியாளனுக்கு உண்மையை உணர்த்தப் போகிறோம்?

இன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிம அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம். அறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி­)  நூல்: முஸ்லி­ம் (3754)
நபி (ஸல்) அவர்கள் வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்திருந்த நிலையில் ஒரு மனிதர் அவர்களிடம் ''எந்த ஜிஹாத் சிறந்தது?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அக்கிரமம் புரியும் அரசனிடத்தில் சத்தியத்தை எடுத்துரைப்பது'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ர­லி) 
நூல்: நஸயீ (4138)
மூத்தவரை முற்படுத்துதல்
கருத்து தெரிவிக்கும் போது முத­ல் பெரியவரைப் பேச விட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.எதை எப்படிக் கையாள வேண்டும் என்ற யுக்தியும் அறிந்தவர்கள்.வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது அவர்களைப் பின்தள்ளி விட்டு இளைஞர்களைப் பேச விடுவது மூத்தவர்களை அவமதித்ததாகவும் கருதப்படும்.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள்.நபி (ஸல்) அவர்கள், ''பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள்.உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ர­லி) 
நூல்: புகாரி (3173)

தெளிவாகப் பேச வேண்டும்
அவசரம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக, வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்துப் பேசினால் நம்முடையக் கருத்து, கேட்பவர்களிடம் உடனே எடுபடும். நம்முடைய பேச்சிற்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம்(அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்) 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)   நூல்: புகாரி (3567
)

நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக, வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­) 
நூல்: புகாரி (3568)
பல விஷயங்களைப் பேசி விட்டு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடும் போது சொல்ல வருகின்ற கருத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டால் கேட்பவரின் உள்ளத்தில் அது ஆழமாகப் பதிந்து விடும்.இல்லையென்றால் கேட்பவர் இதை சர்வ சாதாரணமாக நினைத்து விட வாய்ப்புள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள்.ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ர­லி)  நூல்: புகாரி (95)
சப்தமாகப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் மாத்திரம் சப்தமிட்டுப் பேச வேண்டும்.தேவையில்லாமல் கத்துவது கழுதையின் குரலுக்குச் சமம்.

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' 
அல்குர்ஆன் (31:19)

நல்ல பேச்சுக்களை மட்டும் பேசி, சொர்க்கம் செல்லக் கூடிய மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!   

நன்றி : துபைTNTJ
1 கருத்துகள்:

Unknown சொன்னது…

keep it up

கருத்துரையிடுக