அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

தடை உள்ள வேளையில்.....

(முஸ்லிம் பெண்கள் தங்களது தலையை மறைக்கும் புர்கா அணிவதை தடைச்செய்து பிரான்சு அரசு நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் உருவான சூழ்நிலைகளை குறித்து ஆராய்கிறார் பி.பி.சியின் ஐரோப்பிய எடிட்டர் கெவின் ஹெவிட்.)

“பாரீஸிலிருந்து நான் இதனை எழுதும் வேளையில் நகரத்தில் தடையை மீறி புர்கா அணிந்த பெண்கள் வெளியேவரும் காட்சிகளை தொலைக்காட்சி  சேனல்கள் ஒளிபரப்பின. ஒரு சேனலில் புர்கா அணிந்து கொண்டு கென்ஸா த்ரிதர் என்ற வீட்டுக்கார அம்மா சாலையில் இறங்கிய காட்சி ஒளிபரப்பானது. அவர் கூறுகிறார்: ’12 வருடங்களாக நான் இந்த புர்காவை அணிந்து கொண்டுதான் எனது எல்லாவித வர்த்தகங்களையும் நடத்திவருகிறேன். மேலும் பொதுமக்களிடையே செல்லும்போதும் இந்த புர்காவை அணிந்துதான் செல்கிறேன்.எவராலும் என்னை இந்த இஸ்லாமிய ஆடையை அணிவதிலிருந்து தடுக்க இயலாது. பிறர் இந்த ஆடையை அணிவதை நான் நிர்பந்திப்பதில்லை. எனது மகள்களைக் கூட நான் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிந்துக் கொள்ளட்டும். ஆனால் நான் புர்காவை அணியத்தான் செய்வேன்’ எனக்கூறுகிறார் கென்ஸா.

நாங்கள் எத்தகைய ஆடையை அணியவேண்டுமென்பதை சட்டத்தின் மூலம் தீர்மானிக்க இயலாது என பல முஸ்லிம் பெண்களும் கூறுகிறார்கள்.உண்மையில் பிரான்சில் முகத்தை மறைக்கும் புர்காவை அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகும். 50 லட்சம் முஸ்லிம்கள் வாழும் பிரான்சில் அதிகபட்சமாக 2 ஆயிரம் பெண்களே புர்காவை அணிகின்றனர். பிரான்சில் முகத்தை மறைக்கும் புர்காவை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. தற்போதைய தடையால் சில போராட்டங்கள் நடந்ததாக போலீசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. போராட்டங்களை சமயோஜிதமாக தடுப்பதற்கு போலீசார் முயல்கின்றனர்.

புர்கா தடைக்கு முன்னோடியாக பிரான்சு அரசு 4 லட்சம் மடக்கோலைகளை(notice) நாடு முழுவதும் விநியோகித்துள்ளது. மடக்கோலையின் தலைப்பு ‘முகத்தை மறைக்காத நமது நாடு’ என்பதாகும்.
உண்மையில் ஐரோப்பாவில்  கோலோச்சும் பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையே சில சமூகங்களை புறக்கணிப்பதை பலரும் கண்காணித்து வருகின்றனர்.

சிறுபான்மை சமூகத்தினர் இவ்வளவு காலம் வாழ்ந்ததுபோல் இனிமேல் வாழமுடியாது. அவர்கள் பொது சமூகத்தில் இரண்டற கலந்து மேற்கத்திய கலாச்சாரத்தை கிரகிக்க வேண்டுமென ஆட்சியாளர்கள் சிந்திக்கிறார்கள். அதனால்தான் ‘புர்காவை’ தடைச் செய்ததை பிரான்சு அரசு ‘பிரிவினை சிந்தனைக்கு எதிரானது’ இச்சட்டம் என கூறுகிறது.

முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது.முஸ்லிம்கள் நவீன பிரான்சின் கலாச்சாரத்திற்கு மாறவேண்டுமென ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.இவர்கள்தாம் புர்கா தடையை ஆதரிப்பவர்களாவர். பிரான்சில் பல முஸ்லிம் பெண்களும் முகத்தை மறைக்கும் ‘புர்கா’வை அணியாமல் சாதாரண ஹிஜாபை அணிகின்றனர். சிலர் இதனைக்கூட அணிவதில்லை.முஸ்லிம் பெண்களில் சிலர் கறுப்புத் துணியால் தலையை மறைக்கும் பொழுது வேறு சிலரோ வண்ண நிறங்களிலான துணிகளால் தலையை மறைக்கின்றனர்.ஆகையால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே ‘புர்கா’ தடை பெரிய அளவிலான விவாதங்களுக்கு காரணமாகலாம்.

முற்றிலும் முகத்தை மறைப்பது இஸ்லாத்தில் கட்டாயமில்லை எனவும், இது சில கலாச்சாரங்களிலிருந்து இஸ்லாத்திற்குள் நுழைந்ததாக சிலர் வாதிடுகின்றனர்.இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டம்தான் உறுப்புகளை மறைப்பது என எதிர்தரப்பு வாதிடுகிறது.

ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக கூறலாம்.இச்சட்டம் வெறும் ஓர் அடையாளம் மட்டுமே. ஏனெனில் பிரான்சில் ‘புர்கா’ அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கணவரோ அல்லது இதர நபர்களோ கட்டாயப்படுத்தி புர்காவை அணிவித்தார்கள் என்பதெல்லாம் நீதிமன்றத்தில் அவ்வளவு எளிதாக நிரூபிக்க இயலாது. என்னவாயினும், பொது சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கை ஐரோப்பாவில் மீண்டும் ஓர் சூடேறிய விவாதமாக மாறியுள்ளது.

நன்றி : தூதுஆன்லைன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக