அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கமிஷன்களும், காம்ப்ளிமென்டுகளும்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா ? என்று பாரும்! என்று கூறிவிட்டு மக்களை அழைத்து அவரது செயலைக் கண்டித்து உரை நிகழ்த்தி அல்லாஹ்விடம் கைகளை உயர்த்தி ஒப்படைத்தார்கள்.... அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.
நூல்: புகாரி 6636.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இன்று அன்பளிப்புகள் என்ற பெயரில் தான் கைக்கூலிகள், ரகசியமாகவும், பராகசியமாகவும் வழங்கப்பட்டு ஏராளமான விஷயங்கள் கை மாறப்படுகின்றன.
அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்களிலிருந்து, தொழில் நிறுவனங்கள் தொடங்கி, சாதாரண ப்ளாட்பாரக் கடைகள் வரை பணியாற்றுபவர்களிடம் இந்த நிலை காணப்படுகிறது.
இவ்வாறு பெறப்படுவதை இஸ்லாம் கண்டிக்கிறது ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதை, ஒருவர் மற்றவரால் ஏமாற்றப்படுவதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்க வில்லை.
அரசு கருவூலத்திற்கு வருவது குறைவின்றி வரவேண்டும், முதலாளி மார்களுடைய லாபம் கஜானாவிற்கு குறைவின்றி வரவேண்டும், தொழிலாளிகளுடைய ஊதியம் வியர்வை காயும் முன் பேசப்பட்டதில் குறைவின்றி கிடைக்க வேண்டும். என்பதில் பாரபட்சம் பார்க்காது இஸ்லாம்.
அரசு அதிகாரிகள் பெறும் கையூட்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது செய்தித் தாள்களில் வருவதைப் பார்க்கின்றோம்.
பெரும் தொழில் நிறுவனங்கள் தொடங்கி ப்ளாட்பார கடைகள் வரை தொழிலாளிகளே நிறுவனங்களை நடத்துபவர்களாகவும், பெரும்பாலும் முதலாளிகள் பேங்க் பேலன்ஸை பார்ப்பவர்களாகவும், கல்லாக் கட்டுபவர்களாகவுமே இருப்பார்கள்.
விற்பனைப் பொருள்களை தொழிற்சாலைகளில், அல்லது வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் (Purchashing manager) களுக்கு தொழிற்சாலை அதிபர்கள் கமிஷன் கொடுப்பார்கள், அல்லது விலை உயர்ந்த அன்பளிப்புகளைக் கொடுத்து மடக்கி விடுவார்கள். அதனால் தொழிற்சாலையிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் போதே கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை மறைமுகமாக ஏற்பட்டு விடுகிறது. 
 
அதற்கடுத்து அப்பொருட்களை கீழ்நிலையிலுள்ள சிறிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் Sales Reprasentive-களிடம் கமிஷனை, அல்லது விலை உயர்ந்த அன்பளிப்பை சிறிய நிருவனத்தார் கொடுத்து மடக்கி விடுவார்கள். அதனால் சிறிய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அப்பொருட்கள் சப்ளை செய்யப்படும் நிலை ஏற்படுகிறது.
  
இதனால் வாங்கும் போதும், விற்கும் போதும் இவர்கள் பெற்றுக்கொள்ளும் அற்ப கைக்கூலியினால் முதலாளிக்கு லாபத்தின் பெரும் பகுதி குறைந்து விடுவதால் வளர்ந்த நிறுவனங்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேற முடிவதில்லை அல்லது நிகராக முடிவதில்லை, சிலநேரம் இதனால் நஷ்டத்தில் கூட முடிந்து நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
ஒரு கம்பெனி வளர்வதற்கும், வீழ்வதற்கும் முக்கிய காரணமாக இருப்பது Purchashing manager, Sales Reprasentive  ஆகும்.  
இவர்கள் அல்லாத Show Room களில் (Salse man)  களாக பணிபுரிபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட முதலாளி இல்லாத நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்று அதில் வரும் கூடுதல் தொகையை தனக்கு ஒதுக்கி விடுகின்றனர். 
இன்னும் அந்த நிறுவனத்தில் இல்லாத பொருளைக் கேட்டு வரும் கஸ்டமர்களுக்கு வெளியிலிருந்து வாங்கிக் கொடுத்து விட்டு அதனுடைய லாபத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இது சாதாரணமாக பெரிய தொழில் நிறுவனத்தில் தொடங்கி, ப்ளாட்பார்க் கடைகள் வரை நடக்கின்றன.
1.       கல்லாவிலிருந்து காசு எடுக்க வில்லை,

2.       பொருட்களை கடத்துவதில்லை
அதனால் கமிஷன் பெறுவதிலோ, அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து கூடுதல் கிடைப்பதை எடுத்துக்கொள்வதிலோ, அல்லது வெளியில் பொருளை வாங்கி கை மாத்தி விட்டு அதன் லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்வதிலோ தவறில்லை என்று நினைத்துக் கொண்டு இவற்றை ஹலாலாக்க நினைப்பவர்கள் வேலைத்தேடி அலைவதற்கு முன் தங்களின் வீட்டில் இருக்கும்போது கிடைத்திருக்குமா? இல்லை எனும் போது அவைகளை அடைய நினைக்க கூடாது இது தான் நபி வழி.
உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா ? என்று பாரும்! என்று கூறிவிட்டு மக்களை அழைத்து அவரது செயலைக் கண்டித்து உரை நிகழ்த்தி அல்லாஹ்விடம் கைகளை உயர்த்தி ஒப்படைத்தார்கள்..... அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 6636.
ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட சம்பளமும், இதர சலுகைகளையும் மட்டுமே அடைந்து கொள்ளவேண்டும் லடசங்களையம், கோடிகளையும் கொட்டி நிறுவனம் நடத்தும் முதலாளியிடம் சம்பளம் பெறும் நம்மால் அவருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது, பாதிப்பை எற்படுத்தாத வகையில் பெறப்படும் அன்பளிப்புகளும் கூட நமக்கு தடை அதுவும் முதலாளியையேச் சார்ந்ததாகும். மாறாக மேலதிகமாக அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையை மீறி எதையும் அடைய நினைத்தால் அவைகளால் திருப்தி அடைய முடியாது.
...நன்மையால் நன்மையே விளையும் இந்த(உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன, அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.6427 அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
மேய்ப்பாளன் கொண்டு விடுகின்ற இடத்தில் புல்லை திண்ணுகின்ற வரை கால்நடைகளுக்கு உயிர் பிரியும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை மாறாக தன்னுடைய விருப்பத்திற்கு சென்று வாய்க்கால் வரப்புகளில் விளையும் நச்சுத்தன்மை கொண்ட செடி, கொடிகளை மேயும் போது செத்து விடும் நிலைக்கு தள்ளப்டுகின்றன.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் விதியாக்கிதை அடைந்து கொள்ளவும், தடையாக்கியதை தடுத்துக்கொள்ளும் வரை மனித சமுதாயத்திற்கு இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக எதாவது ஒருக் காரணத்தை கற்பனை செய்து தடையை மீறிப் பொருளீட்டினால் அந்தப் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் அருள் ஏற்படுவதில்லை, அல்லாஹ்வின் அருள் ஏற்படாத பொருளாதாரத்தினால் தேவைகள் நிறைவடைவதில்லை அதனால் தான் (முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். ) என்ற உவமையை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முறையற்ற வழிகளில் ஈட்டும் பொருளாதாரத்தால் தேவைகள் நிறைவடையாததால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வழியில் பொருளை ஈட்டும்  நிலைக்கு தள்ளப்படுவதால் உலக வாழ்வில் நிம்மதி இழந்தவர் மறுமை வாழ்விலும் தோல்வி அடைகிறார்.  
ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது. தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை விட்டு விட்டு அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்குத்தான் அது சாதகமாக இருக்கும். அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை. என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு  மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: (மிஷ்காத்)
இது போன்ற பழக்கம் யாரிடமாவது இருந்தால் தவ்பா செய்து விடுங்கள்  இதுவே இறையச்சத்திற்கு எடுத்துக் காட்டாகும்.இன்று பெரும்பாலான மக்கள் பொருளீட்டுவதற்காக அரபு நாடுகளுக்கு வந்து முக்கியப்  பொறுப்புகளில் அமர்ந்திருப்பதால் கவனத்துடன் பொருளீட்ட வேண்டும் என்பதற்காகன ஓர் நினைவூட்டல் மடல் இது.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி உலகில் நிம்மதியாகவும், அதனால் மறுமையில் வெற்றியாளர்களாகவும் ஆகும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !
   
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அதிரை M.ஃபாருக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக