அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 30 ஏப்ரல், 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-4

ஏகஇறைவனின் திருப்பெயரால்.....

ذَلِكُمُ اللّهُ رَبُّكُمْ لا إِلَـهَ إِلاَّ هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ்.அவனைத் தவிர
வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு
பொருளையும் படைத்தவன்.எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.(6:102)


இதற்கு முந்தைய தலைப்பில் ஒட்டகப் பாலில் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுப் பிடித்துக் கூறியதையும் அதையே 1400 வருடங்களுக்கு முன் மொத்த மனித சமுதாய மேம்பாட்டிற்காக இறக்கி அருளப்பட்ட உலகப் பொதுமறை திருக்குர்ஆனில் ஏகஇறைவன்

கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள்.( திருக்குர்ஆன் 23:21.)

என்றுக் கூறியதையும், தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஏகஇறைவனின் கூற்றுக்கொப்ப நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஒட்டகப்பாலை தொடர்ந்து அருந்தி வருமாறு உத்தரவிட்டு நோயாளிகள் நோய் குணமடைந்ததையும் எழுதி இருந்தோம்.

பாலைவனக் கப்பல்

ஒட்டகத்திற்கு பாலைவனக் கப்பல் என்று செல்லமாக அழைக்கப்படுவதுண்டு.ஏன் என்றால்,  அன்று பாலைவனத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்களையும், அவர்களுடைய வணிகப் பொருட்களையும் சுமந்து கொண்டு குண்டும், குழியும், மணல் முட்டுகளுமானப் பகுதிகளில் தங்கு தடையின்றி சவாரி செய்து கொண்டிருக்கும் அதனால் அதற்கு பாலைவனக் கப்பல் என்று சாதி, மத பேதமின்றி உலகில் அனைவராலும் கூறப்படுவதுண்டு.

சோலை வனமாவதற்கு முன்னிருந்த பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பாலைவனப் பகுதிகளுக்குள் எளிதில் கொண்டு வருவதற்கும் பாலைவனத்தில் விளையக் கூடிய பேரீச்சம் பழம் கோதுமைகளை எடுத்துச்சென்று வெளிச் சந்தையில் விற்றுக் காசாக்குவதற்கும் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் செல்வதற்கான வழித் தடங்கள் அறவேக் கிடையாது.
மிகப்பெரிய பொருளாதாரத்தை முடக்கி சாலைகள் உருவாக்க முடியாத அளவுக்கு அரசு கஜானாவில் வறட்சி நிலை.
மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து மோட்டார் வாகனங்கள் கண்டுப் பிடித்துப் பலநூரு ஆண்டுகள் ஆனப்பிறகும் பாலைவனத்து கடலுக்கடியில் கருப்புத் தங்கம் கண்டெடுக்கும் வரை இதே நிலை நீடித்தது.
உலகில் வாழும் மனித இனம் உட்பட மற்ற அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான் அவர்களுக்கு வாழ்வாதாரம் அவனே வழங்குவதாக திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.
(11:6) பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

இதே போன்று இன்னும் பல வசனங்கள் திருமறைக் குர்ஆன் நெடுகிலும் பல இடங்களில் காணலாம் பார்க்க 6:14, 6:151, 29:79, 29:60, 42:19, 3:37, 3:169.

மேற்கானும் வாழ்வாதாரம் இறைவன் புறத்திலிருந்தே மனிதர்களை வந்தடைகிறது என்பதை அவ்வப்பொழுது தக்க சான்றுகளுடன் மனிதர்களுக்கு இறைவன் நிரூபித்துக் கொண்டே இருப்பான்.

அதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்றுத் திரும்புவதற்கு வசதியில்லாத பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்களுக்காக அவர்கள் தங்கு தடையின்றி பயணிக்கக் கூடிய வகையில் அவனுடைய படைப்பாற்றல் மூலமாக ஒட்டகத்தை ( பாலைவனக் கப்பலை )ப் படைத்து வழங்கினான்.

ஒட்டகத்தின் உட்புறத்தில் ஏகஇறைவனால் அமைக்கப்பட்ட உறுப்புக்களைப் பார்வையிட்டால் அது இன்றைய வாகனங்களுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் பாகங்களைப் போலவே இருக்கும்.

பெட்ரோலில் ஓடும் இன்றைய வாகனமும் -தண்ணீரில் ஓடிய அன்றைய பாலைவனக் கப்பலும்.

இன்றைய வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் டேங்குக்கு நிகராக ஒட்டகத்தின் வயிற்றில் இறைவன் பொருத்திய அதிசய வாட்டர் டேங்க்.

நீர் கிடைத்தால் ஒட்டகம் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் பம்பிங்க் செய்து கொள்ளும் இவ்வாறு பம்பிங்க் செய்து அனுப்பிய 100 லிட்டர் நீரும் அதனுடைய பிற உறுப்புக்களுக்கு எவ்வாறுப் பிரித்து அனுப்புகிறது என்பதைப் படித்தால் உலகின் மூலையில் ஒரு இறைமறுப்பாளன் இருந்தாலும் இறைநம்பிக்கையாளனாக மாறி விடுவான்.


மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட வித்தியாசமான ரத்தத்தின் சிகப்பனுக்கள்

  • பம்பிங்க் செய்து அனுப்பும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது.
  • அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது.
  • குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும்.

நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதன் காரணத்தால் வாழத் தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம் (Explosive Heat Death) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராத அளவுக்கு அதுனுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறது.

கை தேர்ந்த படைப்பாளனாகிய இறைவனின் திட்டமிட்ட ஏற்பாடு.

பிற நாடுகளின் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு குடிநீர் குழாய்கள், அல்லது குட்டைகள், குளங்கள் இருப்பது போல் பாலைவனத்தில் இருக்காது அதனால் மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற அளவில் ஒட்டகத்திற்கும் இரத்தத்தின் சிகப்பணுக்களின் அளவு இருக்குமேயானல் குறைந்தளவு நீரையே தேக்கிக்கொள்ள முடியும்.

நீர் கிடைக்காத வழியில் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருக்கும் பொழுது இரத்த ஓட்டத்திற்கு தேவையான தண்ணீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இரத்தம் பாகுபோல் உறைந்து ஒட்டகத்திற்கு வெடிப்பு மரணம் (Explosive Heat Death) ஏற்பட்டு விட்டால் படைப்பாளனுடைய வல்லமைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் அதனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் அதன் இரத்தத்தின் சிகப்பணுக்களை மற்ற உயிரினங்களுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் பெரிதாக அமைத்தான்.

பெரிய அளவிலான இரத்தத்தின் சிகப்பணுக்கள் நீர் கிடைக்கும்பொழுது தேவைக்கதிமாகவே தேக்கி வைத்துக் கொண்டு இரத்தத்தை உறைய விடாதளவுக்கு இரத்தத்திற்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது. அதனால் அளவுக்கதிகமான வெப்பத்தினால் ஒட்டகத்தின் உடல் திசுக்களில் உள்ள நீர் குறைந்தாலும் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும்.

  • அதனால் ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.
  • ஆனால் மனிதர்களின் உடலில் 12%  நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும்.
குட்டிப் போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் படைப்பாளனின் வல்லமையை பறைசாற்றும் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை.

எரி பொருள் நிரப்பி வாகனத்தை ஸ்டார்ட் செய்ததும் எரி பொருள் அசுர வேகத்தில் எஞ்ஜினை அடைவதைப் போல்
ஒட்டகம் தண்ணீரை பம்பிங் செய்ததும் தண்ணீர் அசுர வேகத்தில் இரத்தத்தின் சிகப்பணுக்களை நோக்கிப் பாய்கிறது.

அவ்வாறு தண்ணீர் பாய்ந்தோடி வருவதை அறிந்த அதனுடைய சிகப்பு அணுக்கள் பழைய நிலையை விட அதிகமாக விரிந்து இடமளித்து அதகிபட்ச தண்ணீரை உறிஞசிக் கொண்டு ரத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது.

அதனால்

எத்தனை தொலை தூரமும், எவ்வளவு அதிகமான சூட்டிலும்,
 சளைக்காமல் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்து கொண்டு பாலைவனக் கப்பல் (ஒட்டகம்) ஓடிக் கொண்டே இருக்கும். சுப்ஹானல்லாஹ் இறைவன் தூய்மையானவன். ...

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

வாகனத்தின் பெட்ரோல் டேங்கின் எரிபொருள் தீர்ந்து விட்டால் லட்சக்கணக்கான ரூபாய் விலைக் கொடுத்து வாங்கிய ''வாகனம்'' பாதியில் நின்றுவிடும் அவ்வாறு நின்று விட்டால் மில்லியனர், பில்லியனரும் கூட நடை ராஜா தான்.

ஆனால், இறைவன் கொடுத்த அருட்கொடை ஒட்டகத்தின் வாட்டர் டேங்கில் தண்ணீர் வற்றி விட்டாலும் தண்ணீரின் தேவை இன்றி ஒட்டகம் படு ஜோராக ஓடிக் கொண்டே இருக்கும் அதன் மேல் அமர்ந்து பயணிப்பவர் தங்கு தடையின்றி பயணத்தைத் தொடர முடியும்.

அடுத்த அதிசயம்

நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு பிறகு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.

சரி ரத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரை அதிகம் உறிஞ்சிக் கொள்வதால் ரெத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது என்பதைக கண்டோம்.

ஒட்டகம் உயிர் பிராணி தானே அதற்கு தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ?
நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ?

என்ற சந்தேகம் ஏற்படலாம் அதையும் அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.

இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப் பரப்புவோம்.

இனவெறி, மொழி வெறி, இறைவன் அருளிய மாரக்கத்தில் இல்லை.

 'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.

'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,

நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'
என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். நபிமொழி


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக