அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 13 ஏப்ரல், 2011

உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
 29(45)

29:45. (முஹம்மதே!) வேதத்திரிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள்

உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள் அதிகம் அடங்கி இருப்பது இஸ்லாம் கூறும் நற்செயல்களில் தொழுகை என்ற நற்செயலிலாகும்.

உலகில் வாழும் பொழுது, உள்ளத்தில் அமைதியும் உடலில் ஆரோக்கியமும் ஏற்படுகிறது. மறுமையில் இறைவனை சந்திக்கும் பொழுது எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத இன்ப சுவனபதி பரிசாக கிடைக்கிறது.

உள்ளத்தில் அமைதி.

அல்லாஹ்வை நினைவு கூறுகின்றவர்களுடைய உள்ளம் அமைதிப் பெறுகின்றது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

(13:28). நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

பள்ளியில் சென்று தொழுதுவிட்டு வெளியில் வருகின்றவர்களுடைய முகம் பிரகாசத்தால் மின்னிக் கொண்டிருப்பதை அனுபவ ரீதியாகப் பார்த்திருக்கின்றோம்.

அதற்கு காரணம் இறைவனை தொழுத சந்தோஷத்தில் உள்ளம் அமைதிப் பெறுவதால் அகத்தின் அழகு முகத்தில் (மின்னுவது) தெரிகிறது.

சினிமா, ட்ராமா அல்லது இன்னப்பிற மோசமான காட்சிகளைக் கண்டு விட்டு வெளியில் வருகின்றவர்களுடைய முகத்தைப் பார்த்தால் இருள் கவ்விக் கொண்டிருப்பதைக் காணலாம்.

 அதற்கு காரணம் பொய்யான, மோசமான, வன்முறையைத் தூண்டக்கூடிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற வரையில் ஒருவித ஆவலால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உடல் தற்காலிக உற்சாகமடைகிறது, அது நிருத்தப்பட்டதும் நரம்பு மண்டலம் சோர்வடைந்தாலும் நீண்ட நேரத்திற்கு பொய்யான, நடைமுறைக்கு சாத்தியமற்ற, காட்சிகளைக் கண்டதால் உள்ளம் அமைதி இழந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருப்பதால் அது முகத்தில் பிரதிபிலிக்கும் பொழுது முகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
உடலில் ஆரோக்கியம்.

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு உள்ளத்தில் அமைதித் தவழ வேண்டும், உள்ளத்தில் அமைதித் தவழ்ந்தால் மட்டுமே இரத்த ஓட்டம் சீராக இருக்கும், இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடல் ஆரோக்கியம் உடையவர்களே இறையருளால் நற்செயல்கள் அதிகம் புரிய முடிகின்றது. நாமும் அனுபவ ரீதியாக இதை உணர்ந்தும் இருக்கிறோம். அதனால் உள்ளத்திற்கு அமைதி தரக் கூடிய தொழுகையை நேரம் தவறாமல் தொழுது கொள்ள வேண்டும்.

நன்னடத்தையும் உடல் ஆரோக்கியமும்.

உலகில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களில் கடந்த 1972 முதல் 2006 வரை பென்சில்வேனியா பல்கலைகழகத்தின் சமூகநல ஆய்வாளர் கிரிஸ்டோபர் கெய்டில் என்பவர் 423 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் 54 பேர் இறைவழிபாட்டிலிருந்து விலகியவர்கள் என்றும், 96 பேர் சிறந்த இறைவழிபாட்டிற்காக மதம் மாறி இறைவழிபாட்டில் மூழ்கியவர்கள் என்றும் இவ்வாறு இறைவழிப்பாட்டில் மூழ்கிய 96 பேரும் உடல்நலம், மற்றும் நன்நடத்தையில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை தனது ஆய்வில் சமர்ப்பித்திருக்கின்றார்.


(29:45) (முஹம்மதே!) வேதத்திரிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

தொழுகையில் ஈடுபடுபவர்களை விட்டு தீமைகள் தாமாக விலகிக்கொள்வதால் தான் இறைவழிப்பாட்டில் மூழ்கிய அந்த 96 பேரும் உடல் நலத்துடன் நன்னடத்தை உடையவர்களாக இருந்ததை கிரிஸ்டோபர் கெய்டில் அவர்களின் ஆய்வறிக்கை சான்றுப் பகர்கிறது.

கலப்படமற்ற வணக்கம்.

தொழுகை உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொண்டு தீயசெயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் கலப்படமற்ற வணக்கத்தை அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டும் அவனுடைய பண்புகளில் ஒன்றையேனும் யாரிடமும் விட்டு விடக்கூடாது.

(39:2) (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!

 அல்லாஹ்வும் உண்டு, அவ்லியாக்களும் உண்டு என்று கலப்பட நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்வை தொழுது விட்டு, அவ்லியாக்களிடம் துஆக் கேட்டால் அது உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொள்ள அறவே உதவாது.

ஏன் என்றால் ?

அவ்லியாக்களிடம் செல்பவர்களில் பெரும்பாலானோர் உலக ஆதாயத்தை எதிர்பார்த்தே செல்கின்றனர் அவர்கள் வேண்டிக்கொண்டவைகள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் டென்ஷன் ஏற்பட்டு உள்ளம் அமைதி இழந்து ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது இதன் மூலம் உடல்நலம் பாதிக்கிறது. இதனால் உலகில் நஷ்டம், மறுமையிலோ பெருத்த நஷ்டம்.

 தனித்தோன் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்கள் உலகாதாயத்தை எதிர்பார்ப்பதில்லை எதுவாக இருந்தாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையில் தொழுவதால் எதிர்பார்த்தது நடந்தால் ( வானத்திற்கும், பூமிக்குமாக குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தாமல் ) இறைவனுக்கு நன்றி மட்டும் கூறுவார்கள். எதிர்பார்த்ததற்கு மாற்றமாக நடந்தால் (ஒரேடியாக துவண்டு சரிந்து விழுந்து விடாமல்) சகித்துக்கொள்வார்கள் என்று ஏகத்துவ வாதிகளின் சிறந்த பண்பை 1400 வருடங்களுக்கு முன்பே பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 இறைநம்பிக்கையாளனின் அனைத்துக் காரியங்களும் நன்மையாக அமைவது வியப்பாக உள்ளது. இந்நிலையை இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறு யாரும் அடைய முடியாது ! அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான் இது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்கு துன்பம் ஏறப்பட்டால் அதை சகித்துக் கொள்கிறான். இதுவும் அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 இன்பம், துன்பம் இரண்டும் ஏகத்துவவாதிகளுக்கு நடுநிலைத் தன்மையை ஏற்படுத்துவதால் டென்ஷன் ஏற்படுவதில்லை அதனால் உள்ளத்தில் அமைதித் தவழுகிறது. இந்த நடுநிலைத் தன்மை ஒருவருக்கு வரவேண்டுமென்றால் அவர் தனது வணக்கத்தை அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தினால் ஆற்றல் மிகும் அல்லாஹ் தனது அடியார்களை தீமைகளை நெருங்க விடாமல் தடுத்து விடுவான் அதனால் உடல் நலத்துடனும், நன்னடத்தையுடனும் திகழ முடியும்.

இது தொழுகையாளிகளுக்கு உலக வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய நன்மைகள்,மறுமை வாழ்க்கையிலோ உளூவில் தொடங்கி தொழுகை வரையிலான கொத்துக் கொத்தான நன்மைகள் சொர்க்கத்தின் திறவுகோலாக மாறுகிறது.

தொழுகையாகிய சொர்க்கத்தின் திறவுகோல் மூலம் எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத சுவனத்தின் நீண்டதொரு இன்பத்தை அனுபவிக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருன்புரிவானாக !

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். (3:104)

நன்றி : அதிரை M . ஃபாரூக்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக