அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சுண்டைக்காய்

காய்களும் கனிகளும் இறைவனின் அருட்கொடைகள்.  மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு மிக அதிகம்.  மனித உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் காய்களில் நிறைந்துள்ளன.  காய்களும் கனிகளும் மனித உடலுக்கு எளிதில் சேரக்கூடியவை.  நம் முன்னோர்கள் காய்கனிகளுக்கு முதலிடம் கொடுத்தனர்.

நாம் பலவகையான காய்களை அன்றாடம் உணவில் சேர்க்கிறோம்.  இக்காய்கள் சுவைக்கும் பசிக்கும் மட்டும்தான் என பலர் நினைக்கின்றனர்.  பசியைப் போக்குவதுடன் சுவையுடன் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுப்பது இவைதான் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த கட்டூரையில் நாம் அறிந்துகொள்ள இருப்பது சுண்டைக்காய்.

சுண்டைக்காய் அனைவரும் அறிந்திருக்கும் காய்தான்.  பலர் வீட்டுத் தோட்டங்களில் இந்த சுண்டைச்செடி இடம்பெற்றிருக்கும். 

நன்கு அகன்ற இலைகள், கொத்துக்கொத்தாக வெள்ளை நிற பூக்கள், கொத்துக்கொத்தாய் சிறிய உருண்டை வடிவ காய்கள் என பார்க்க அழகாக காணப்படும் செடி இது.

சுண்டைக்காயில் இருவகை உண்டு.

1. காட்டுச் சுண்டை

2. நாட்டுச் சுண்டை எனப்படும் யானைச் சுண்டை.

மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை.  இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.  இவற்றின் மருத்துவப்பயன்கள் ஒன்றே.ஐயம், நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், வளிப்பெருக்கு இவை போகும்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.  சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சிறுகசப்பு சுவை உடையது.  இதை வாரம் இருமுறை சாப்பிடுவந்தால் இரத்தம் சுத்தமடையும்.  உடற்சோர்வு நீங்கும்.

மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.  வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடற்புண்களை ஆற்றும்.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும்.  வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். 

சுண்டைக்காய்     - 10
மிளகு        - 5
கறிவேப்பிலை    - 10 இலை

இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.  மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

சுண்டைக்காய் சூப்

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு,  சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும்.  உடல் சோர்வை நீக்கும்.  தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.  ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

சுண்டைக்காய் வற்றல்

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.  இது மார்புச்சளியைப் போக்கும்.  குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் நீங்கும்.

நன்றி : நக்கீரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக