அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ---40(60)
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள்இறைவன்கூறுகிறான்.திருக்குர்ஆன். 40:60
பொக்கிஷங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனின் அடியார்கள் கேட்கும் பொழுது இல்லை என்று சொல்லாமல் கைநிறைத்து அனுப்பக் கூடிய கருளையாளன் ஆவான்.
கொடையாளனும், கருணையாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து கை நிறையப் பெற்றுக்கொள்ள  வேண்டுமென்றால் அவனின் கருணைக்கு உகந்த அடியாராகத் திகழ வேண்டும்,

கையேந்துபவர்
Ø  கையேந்துவதற்கு முன் அவருடைய உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்க வேண்டும்,

Ø  அவரது நாவு திக்ருகளால் (இறைவனை துதிப்பதில்) திளைத்திருக்க வேண்டும்.

Ø  அவரது எண்ணங்கள் ஹலாலானவைகளை நாடி இருக்க வேண்டும்,

Ø  அவரது கரங்கள் ஹலாலானவைகளை ஈட்டி இருக்க வேண்டும்,

Ø  அவரது உடல் உறுப்புகள் ஹலாலானவைகளை அனுபவித்திருக்க வேண்டும்.

இதன் பின்னரே, அவரால் இறைவனை நோக்கி ஏந்தப்பட்ட அவரது கரங்கள் வெறுமனே திருப்பி அனுப்பப்படுவதில்லை.
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;.... (40:60)
...அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்'' (எனவும் அவர் கூறினார்.)  (7:87)
அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். ஏனெனில், தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் விரும்புகிறான். ஆதார நூல்: திர்மிதி.
கருளையாளனாகிய அல்லாஹ் அவனிடம் பிரார்த்திப்போரின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான், தீர்ப்பும் கூறுகிறான், அந்த தீர்ப்பு நிறைவேறும் காலத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு விடுவான்.
பிறருக்கும், தனக்கும் தீங்கு விளைவிக்காத நியாயமான எந்தக் கோரிக்கையையும் இறைவன் மறுப்பதில்லை. பாவமான காரியங்களுக்காகவும், இரத்தபந்த உறவுகளை துண்டிப்பதற்காகவும் கேட்கப்படும் பிரார்த்தனைகளைத் தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளப்படும்' என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: புஹாரி.
அன்றும் நடக்கும், நின்றும் நடக்கும்.
பிராரத்திப்போரின் பிரார்த்தனைகளில் சிலவற்றை அன்றே நிறைவேற்றியும் கொடுப்பான், சிலவற்றை நின்றும் (காலம் தாழ்த்தி) நிறைவேற்றிக் கொடுப்பான்.
எத்தனையோ முறை அழுதுகேட்டும் காரியம் நடப்பதாக தெரியவில்லையே என்று பிராரத்திப்போருக்கு அல்லாஹ்வின் ஆற்றலின் மீது நம்பிக்கையற்ற சிந்தனை எழலாம். ( ஷைத்தான் இவ்வாறு சிந்திக்கத் தூண்டுவான்) இதன் காரணமாகவே உருவானது தான் தர்ஹாக்களும், பால்கித்தாபு ஜோதிடர்களும். 
நான் பிரார்த்திக்கிறேன், எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி.
அண்ணல் அவர்களின் வாழ்வினிலே...
அகிலம் அனைத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்)அவர்களின்  நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்விடம் கையேந்தி கேட்ட பிரார்த்தனைகளில் சிலவற்றை அல்லாஹ் அன்றே நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறான், சிலவற்றை காலம் தாழ்த்தியும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றான்.
அண்ணல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்களை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் விரக்தி அடைந்து வேறு வழியைத்தேடி ஈமானை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது ஏகத்துவத்தில் உறுதியாக நிற்பதுடன் பிறருக்கும் முன்மாதிரியாகி விடலாம். 
அன்றே நிறைவேற்றப்பட்ட பிரார்த்தனை.
இறைத்தூதர்(ஸல்)அவர்களும், அபூபக்ர்(ரலி) அவர்களும் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றுக் கொண்டிருந்த பொழுது அபூபக்ர்(ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்களுக்குப் பின்னால் ஒரு குதிரை வீரர் (சுராகா) என்பவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர் அவர்களே! ஒருக் குதிரை வீரர் நம்மை நெருங்கி விட்டார் என்றுக்கூறினார்கள். திரும்பிப்பார்த்த இறைத்தூதர்(ஸல்)அவர்கள் இறைவா! அவரைக் கீழே விழச்செய்! என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது பிறகு குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்றதும். குதிரை வீரர் சுராகா மனம் திருந்தி, 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள் (நிறைவேற்றுகின்றேன்) என்றுக்கூறினார். அதற்கு இறைத்தூதர் (ஸல்)அவர்கள், இங்கேயே நின்றுகொண்டு எங்களை பின்தொடர்ந்து வரும் எவரையும் (எங்களை பின் தொடர) விட்டு விடாதே என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார்...புகாரி 3911. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
புளுதியை கிளப்பிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவரும் குதிரையை இன்னும் வேகமாக விரட்டிக்கொண்டு கையில் ஆயுதத்துடன் அண்ணல் அவர்களை குறிவைத்தவராக நெருங்கிக் கொண்டிருக்கின்றார்.
அது கண் இமைக்கும் நேரத்தில் அண்ணல் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதால் ஞானம் நிறைந்த அல்லாஹ் அண்ணல் அவர்களின் பிரார்த்தனையை தாமப்படுத்தாமல் அதே இடத்தில் நிறைவேற்றிக் கொடுத்து, கொல்ல வந்தவரையே அவர்களுக்கு எல்லை பாதுகாப்பு வீரராக மாற்றி விடுகின்றான்.   
நின்று நிறைவேற்ப் பட்டப் பிரார்த்தனை.
நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் கஃபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து 'இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்? என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் (இறைவனிடம் சிரம் பணிந்து கொண்டிருக்கும் பொழுது) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்)அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே (சிரம் பணிந்த நிலையிலேயே) கிடந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி 'யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்கு எதிராக  நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், 'அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருந்தார்கள்...
பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, யா அல்லாஹ்! அபூஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்றுக் கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ்கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.ஆதாரம் புகாரி4:250
இத்தனைப் பெரிய அநீதிக்காக அல்லாஹ்விடம் கரம் உயர்த்தி அவனின் தூதர் கேட்டப் பிரார்த்தனைக்கு பதிலளித்து தீர்ப்புக் கூறிய அல்லாஹ் அது நிறைவேற்றப்படும் காலத்தை சுமார் பத்து வருடங்கள் பிற்படுத்தினான்.
நின்று நிறைவேற்றப்பட்டதால் உருவான  நன்மைகள்.
அண்ணல் அவர்கள் அநீதியாளர்களை அல்லாஹ்விடம் பெயர் கூறி ஒப்படைத்தப் பின்னர்
Ø  குரைஷிகளின் மக்களில் சிலரை சிறிது சிறிதாக அண்ணல் அவர்களின் சத்தியப்பிரச்சாரத்தில் இணையச் செய்கிறான்,

Ø  அவர்களை ஒரு கூட்டமாக்குகிறான்,

Ø  அவர்கள் ஒரு கூட்டமாகியதும் அவர்களுக்கு ஒரு நாட்டை (மதீனாவை) ஏற்படுத்துகிறான்.

Ø  அந்த நாட்டில் (மதீனாவில்) அவர்களை அதிபதியாக்குகிறான்.

Ø  அண்ணல் அவர்களின் பிடரியின் மீது ஒட்டகக் குடலை போட்டு அவர்கள் மூச்சுத் திணறுவதைக் கண்டு ரசித்த  ஈரமில்லாதவர்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் பத்ரு யுத்த களத்திற்கு ( வரமறுத்தவர்களையும்) கொண்டு வந்து சேர்க்கிறான். 
அவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும் சாதாரண மக்கள் அல்ல,
Ø  அதிகாரத்தில் கோலோச்சுபவர்களாகவும்,

Ø  அன்றைய மக்களிடத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும்,

Ø  புத்தி கூர்மை மிக்க அபுல் ஹிக்கம் களாகளாகவும்,

Ø  போர் தந்திரிகளாகவும்,

Ø  எண்ணற்றப் போர்களில் வெற்றி வாகை சூடியவர்களாகவும்  திகழ்ந்தவர்கள். 
மக்களில் செல்வாக்கு மிக்கவர்களை, அதிகாரத்தில் கோலோச்சியவர்களை போர் படை தளபதிகளை மாவீரர்களை மனிதர்களின் அரசனாகிய வலிமை மிக்க அல்லாஹ் மண்ணை கவ்வச் செய்து பாழும் கிணற்றில் வீசச் செய்தான். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ்கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அன்று அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அநீதியாளர்களை அல்லாஹ்விடம் பெயர் கூறி ஒப்படைத்த பொழுதே அநீதியாளர்களை அவ்விடத்திலேயே அழித்திடும் வல்லமை மிக்கவன் அல்லாஹ் என்பதை எல்லோரும் அறிந்திருக்கின்றோம் ஆனாலும் தாமதப்படுத்தியதன் மூலமாக பொறுமையின் பொக்கிஷமாகிய அண்ணல் அவர்களுக்கு ஏராளமான நன்மைகளை ஏற்படச் செய்தான் நீதியாளன் அல்லாஹ்.
Ø  பத்ரில் வெற்றியைக் கொடுத்தான்,

Ø  பத்ரில் பிடிக்கப்பட்டை கைதிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த கல்விமான்கள்; கிடைத்தனர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மூலமாக இஸ்லாமிய அணியினருக்கு கல்வி புகட்டப்பட்டது.

Ø  அப்பாஸ்(ரலி) போன்றவர்கள் பத்ரில் கண்ட சில அதிசயத்தக்க நிகழ்வுகளைப் பார்த்து பிரமித்துப் போய் இஸ்லாத்தை தழுவினர். (முந்தைய பிரார்த்தனையில் சுராக்கா அவர்களை இறைவன் பரிசாக்கினான், இந்தப் பிரார்த்தனையில் அப்பாஸ் ரலி போன்ற அறிஞர்களை பரிசாக்கினான். )

Ø  இந்த யுத்தத்தின் பிறகே மதினாவின் யூதர்கள் அரசின் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்தனர்,

Ø  மதீனாவின் சுற்றுப்புறத்தில் உள்ள யூதர்களின் சிற்றரசுகள் மதீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

Ø  மதீனாவிற்கு வெளியில் உள்ள வல்லரசுகளின் பார்வை மதீனாவை நோக்கி திரும்பியது.

Ø  இதன் பின்னரே இந்தப் பொறுமையாளர்களைக் கொண்டு உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஏகஇறைவனாகிய அல்லாஹ் நேர்வழி காட்டச் செய்தான்
முஸீபத்துகளும் நீங்கும். .
Ø  நாமே ஆச்சரியத்தின் விளிம்பிற்கு செல்லுமளவிற்கு பல சம்பவங்கள் நம் வாழ்வில் நடப்பதுண்டு.

Ø  விபத்துகளிலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்திருப்போம்,

Ø  திருட்டு வழிப்பறியிலிருந்து தப்பித்திருப்போம்,

Ø  தீராத நோயென்று கைவிடப்பட்டதிலிருந்து நிவாரணம் பெற்றிருப்போம்,

Ø  எவரிடமிருந்தாவது ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்போம்,
இதுமாதிரியான சம்பவங்களின் போது அல்லாஹ்வே நம்மைக் காப்பாற்றினான் என்று நம்மை அறியாமல் நம்முடைய நாவு மொழியத் தொடங்கியதை ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏராளமான சம்பவங்கள் மூலம் உணர்ந்திருக்கின்றோம். கையேந்தியவரின் முஸீபத்துகளை இந்த வழிகளிலும் இறைவன் போக்குவான்.
மறுமையிலும் கிடைக்கும்.
இன்னும் இறைநம்பிக்கiயாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கை ஒன்றுடன் முடிவதில்லை, மாறாக இன்னுமொரு வாழ்க்கை மரணத்திற்குப்பின் உண்டு என்ற நம்பிக்கையில் தடம் புரளாமல் வாழ்பவர்  சொர்க்கம் செல்லும் அளவுக்கு நன்மைகள் அவரிடம் இல்லாமல் இருந்தால் உலகில் கேட்டப்  பிரார்த்தனைகளுக்கான கூலிகளை குறைவன்றி கொடுத்து சொர்க்கத்தில் நுழைவிப்பான் அல்லது நரகின் தண்டனை நாட்களை குறைப்பான் நீதியாளன் அல்லாஹ்.
Ø  நாம் கேட்டது உடனே இம்மையில் கிடைக்கும

Ø  நாம் கேட்டதற்கு ஈடாக தீங்கிலிருந்து நம்மை காப்பான்.

Ø  நாம் கேட்டதற்கு ஈடாக மறுமையில் கிடைக்கும்.
என்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: ஹாக்கிம்
படிப்பினைகள்
Ø  தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னார் தான் காரணம் என்று உறுதியாகத் தெரிந்தால் அவர்களின் பெயரைக்கூறி இறைவா! இன்னாரை நீ பார்த்துக்கொள் என்றுக்கூறி ஒப்படைத்து விட்டு பொறுமையை கை கொள்ள வேண்டும்.

Ø  இன்னார் தான் என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால்? எனக்கு அநீதி இழைத்தவர்களை இறைவா! நீ பார்த்துக்கொள் என்றுக்கூறி ஒப்படைத்து விட்டு பொறுமையை கை கொள்ள வேண்டும்.

Ø  தனது சொந்த தேவைகளுக்காக அல்லாஹ்வின் அருளை நாடினால் அதற்காகவும் பெறுமையை கை கொள்ள வேண்டும்
பிரார்த்திப்போரின் பிராரத்தனைகளில் எதை அன்றே நிறைவேற்றினால் அடியானுக்கு நன்மை பயக்கும், எதை நின்று (நிதானமாக) நிறைவேற்றினால் அதுவும் அடியானுக்கு நன்மை பயக்கும், என்கின்ற ஞானம் நிரம்பப் பெற்றவன் அல்லாஹ் என்பதால் அவைகள் நிறைவேறுவதற்கான காலத்தைக் குறித்து அந்தந்த நேரத்தில் அவைகளை தாமாக நிறைவேறச் செய்திடுவான்.
நான் பிரார்த்திக்கிறேன், எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
                                     அதிரை M. ஃபாரூக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக