அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

குர்ஆன் அரபியில் ஏழுதப்பட்டுள்ளது ஏன் ?

திருமறைக் குர்ஆன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நேர்வழிகாட்டியாக அருளப்பட்டிருக்கின்றது. மொழி நாடு இனம் நிறம் என்ற வேறுபாடு இல்லாமல் இது அனைவருக்கும் உரிய பொதுமறையாகும்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ
(185)2-

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
அல்குர்ஆன் (2 : 185)

எனவே குறிப்பிட்ட மொழியினரோ நாட்டினரோ குர்ஆன் எங்களுக்கு மட்டும் உரியது என்று சொந்தம் கொண்டாட முடியாது.
இந்தக் குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு செல்வதற்கு இறைவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூராக நியமித்தான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபு மட்டுமே தெரியும்.
எனவே அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.
உலகில் உள்ள மொழிகளில் இறைவனுக்குப் பிடித்தமான மொழி அரபுமொழி தான் என்ற காரணத்திற்காக அரபுமொழியில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக இந்தக் குர்ஆனை மக்களிடம் கொண்டுசெல்ல ஏதாவது ஒரு மொழி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில் தான் அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.
எந்த மொழியில் குர்ஆனை இறக்கினாலும் மற்றமொழிபேசுபவர்கள் ஏன் எங்கள் மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழ் மொழியில் குர்ஆன் அருளப்பட்டிருந்தால் ஆங்கில மொழிபேசுபவர்கள் ஆங்கிலத்தில் குர்ஆன் ஏன் அருளப்படவில்லை என்று கேட்பார்கள்.

இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு எந்த மதிப்பும் கிடையாது.

22391 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபு மொழி பேசுபவருக்கு எந்த சிறப்பும் இல்லை. அரபு மொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறு மொழி பேசுபவருக்கு எந்த சிறப்பும் இல்லை.
நூல் : அஹ்மது (22391)

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.

إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خلَا فِيهَا نَذِيرٌ(24)35

நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.அல்குர்ஆன் (35 : 24)

எனவே எல்லா மொழி பேசக்கூடிய மக்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள். அவரவரது மொழிகளில் அம்மக்களுக்கு இறைவேதங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. வணக்கத்தில் உலக முஸ்லிம்களுக்கிடையே ஒருமைப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தொழுகைகளில் குர்ஆன் அரபியில் ஓதப்படுகின்றது. உலகம் முழுவதிலும் தொழுகையில் அரபு மொழியில் ஓதப்படுவதால் எந்த மொழி பேசக்கூடியவரும் ஓதப்படுவது குர்ஆன் தான் என்பதை புரிந்துகொள்ளலாம்.
வெவ்வேறு மொழி பேசக்கூடியவர்களுடைய ஒருமைப்பாடு ஏற்படவேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மொழியை பொதுவான மொழியாக ஆக்க வேண்டும். உதாரணமாக நம் நாட்டின் தேசிய மொழி இந்தி மொழியாக ஆக்கப்பட்டிருக்கின்றது. நம் நாட்டின் தேசிய கீதம் வங்காள மொழியில் உள்ளது. வங்காள மொழியில் தேசீய கீதம் பாடப்பட்டால் அது தேசீய கீதம் என்பதை வேறு மொழி பேசுபவர்களும் புரிந்துகொள்கிறார்கள். ஒரு நாட்டில் ஒருமைப்பாடு நிலவுவதற்கே ஒரு குறிப்பிட்ட மொழி பொதுவானதாக ஆக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றதென்றால், இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மார்க்கம். திருக்குர்-ஆன் உலகமக்கள் அனைவருக்கும் பொதுமறை. எனவே அது ஒரு குறிப்பிட்ட அரபி மொழியில் இறக்கப்பட்டது என்பதற்கும், தொழுகை போன்ற பொதுப்படையான வணக்க வழிபடுகள் மட்டும் அரபி மொழியில் இருப்பதற்கும் கூடுதல் நியாயங்கள் உள்ளன.
இந்த அடிப்படையில் தான் குர்ஆனும் அரபுமொழியில் எழுதப்படுகின்றது. படிக்கப்படுகின்றது. குர்ஆனின் அரபு வாசகங்கள் இறைவனின் வார்த்தைகள் என்ற காரணத்துக்காக அதை அப்படியே முஸ்லிம்கள் ஓதுகிறார்கள். மேலும் குர்ஆனின் மூல மொழியான அரபியில் முஸ்லிம்கள் குர்ஆனை ஓதிவருவதால் குர்ஆனுடைய மூலமொழி அழிந்துவிடாமல் அதை பாதுகாக்கின்ற நன்மையும் ஏற்படுகின்றது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் தங்களது பிரார்த்தனைகள் மற்றும் ஜும்ஆ பிரசங்கங்கள் போன்றவற்றை அவரவர் தாய்மொழியில் தான் செய்துவருகின்றனர். அதற்கு இஸ்லாம் எத்தகைய தடையையும் விதிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அரபியில் மட்டும் குர்ஆனை படிக்கப்படுவதில்லை. ஆங்கிலம், தமிழ், மலையாளம் இன்னும் ஏராளமான மொழிகளில் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்பட்டு வருகின்றது.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா, யூசுஃப்ஃபைஜீ & அப்துல் ஃபாருக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக