அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?

உலகம் இன்று பல பிரச்சினைகளையும், சிக்கல்களையும் நாளுக்கு நாள் அதிகமாக சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளின் பின் விளைவுகள் அல்லது குறிப்பிட்ட பிரச்சனைகளினால் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றி பலர் சிந்திக்காமல் இருக்கிறார்கள்.இன்று பல நாடுகளில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டுப் போர்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தப் போர்களில் முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பல நாட்டவரும் தொடர்புபட்டுத்தான் இருக்கிறார்கள்.

மேற்கு நாடுகள் தங்களைவிட கீழ் நிலையில் உள்ள நாடுகள் மீது அத்து மீறி போர் தொடுப்பது, அருகில் உள்ள நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் போர் தொடுப்பது என்று பல நாடுகள் தங்கள் ஆதிக்க வெறியைக் காட்ட முயலும் நேரத்தில் அதைத் தடுப்பதற்கு அல்லது அவர்களுடன் போர் தொடுப்பதற்குத் தயாராகும் பல இயக்கங்கள் இன்று உலகில் காணப்படுகின்றன.

முஸ்லீம்கள் அல்லாத பலரும் இவ்வாறு செய்தாலும் இஸ்லாத்தின்
சட்டத்தைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுவதினால் இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இயக்கங்களைப் பற்றி மட்டுமே நாம் இந்த இடத்தில் பார்க்க இருக்கிறோம்.

ஆக்கிரமிப்பு நாடுகளுடன் அல்லது அநியாயம் செய்யும் நாடுகளுடன் சண்டையிடும் பல இயக்கங்கள் தங்கள் கொள்கைக்கு வைத்திருக்கும் பெயர் ஜிஹாத்.

ஜிஹாத் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அதை எப்போது எப்படி யார் செய்வது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜிஹாதின் பெயரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் இப்படிப் பட்ட இயக்கங்கள் தற்கொலைத் தாக்குதலும் ஜிஹாத் என்று சொல்லித் தான் தங்கள் தொண்டர்களை மூலைச் சலவை செய்கிறார்கள்.

இன்று இஸ்லாமிய பெயர்களில் பல இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களாக மக்கள் மத்தியில் இனம் காணப்பட்டுள்ளது. அதில் சிலரது பொய்யான தகவல்கள் மூலம் இனங்காணப்பட்டாலும் பல இயக்கங்கள் மார்க்கம் தடுத்த தீவிரவாத செயல்களில் ஈடுபடத்தான் செய்கின்றன.

உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு மக்கள் நடமாடும் இடங்களில் சென்று வெடிக்கச் செய்வது.

பள்ளிகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது.

கல்லூரிகளை தாக்குதலுக்கு உள்ளாக்குவது, சந்தைகளில் ஆள் நடமாட்டம் நிறைந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வது என்று பலதரப்பட்ட முறைகளில் இந்த தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் இது எந்த விதத்தில் நடந்தாலும் அவற்றுக்கும் மார்க்கம் காட்டும் ஜிஹாதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நிதர்சனம்.

தற்கொலைக்கு நிரந்தர நரகம்.

யார் தற்கொலை செய்து உயிர் துறக்கிறாறோ அவர் மறுமையில் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார். தற்கொலைக்கு மறுமையில் நிரந்தர நரகம் என்பதை பலர் அறிந்திருந்தாலும், தங்கள் இயக்க தொண்டர்களுக்கு இதைப் பற்றி விளக்கும் போது அது மனம் வெறுத்து தன்னைத் தானே அழித்துக் கொள்வதை மட்டும் தான் சொல்கிறது என்றும் ஆனால் தங்கள் இயக்கம் மக்களை ஆதிக்க நாடுகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த தற்கொலைத் தாக்குதல் சித்தாந்தத்தை வைத்திருப்பதாகவும் வாதிடுகிறார்கள்.

ஆதிக்க நாடுகளிடமிருந்து தங்கள் மக்களை காக்க வேண்டும் என்பதற்காக நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காரியத்தை இஸ்லாம் செய்யச் சொல்லவில்லை. அப்படி செய்தால் அது பெரும் குற்றமாக கருதப்படும்.

உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம். (அல்குர்ஆன் 48:25)

ஒரு பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்தப் பகுதியை எதிர்த்துத் தாக்கக் கூடாது அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தனியாக விலகாத வரை அந்தப் பகுதி மீது முஸ்லிம்கள் போர் தொடுக்கக் கூடாது என்பது தான் இந்த வசனம் இடுகின்ற கட்டளை!

ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எல்லா நியாயங்களும் இருந்தாலும் மேற்கண்ட இந்தக் காரணம் இருந்தால் போர் தொடுக்கக் கூடாது என்பது இறைவனின் கட்டளை!

ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் இஸ்லாத்தில் அனுமதியில்லாத ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை முற்றிலும் புறக்கணித்து விடுகின்றது.

இவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்று குவிப்பது இஸ்லாத்தின் எதிரிகளை அல்ல! பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளானாலும் சரி! இந்தியாவின் காஷ்மீரானாலும் சரி! இது போன்ற தாக்குதல்களில் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும்,90 சதவிகிதத்திற்கு மேல் முஸ்லிம்கள் தான்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.   
நூல்:புகாரி (5778)

யார் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நோக்கில் தற்கொலை செய்து கொள்கிறாறோ அவருக்குறிய கூலி நிரந்தர நரகம் என்பதை மேற்கண்ட செய்தி தெளிவாகக் குறிப்பிடுகிறது.

தற்கொலை என்பது எதற்காக வேண்டியிருந்தாலும் இதுதான் தண்டனை என்பது தெளிவான பின் அதற்க்கில்லை இதற்க்கில்லை என்று பிரிப்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரத்தை முன் வைக்க வேண்டுமே தவிர வழிந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று இருக்கும் பல அமைப்புகள் வழிந்து விளக்கம் கொடுக்கும் காரியத்தை கனகச்சிதமாக செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட, தற்போதும் சில நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளினால் சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இவர்கள் அனைவரும் தாங்கள் தியாகம் செய்து கொள்வதாக நினைத்து நிரந்தர நரகத்திற்கான காரியத்தை செய்கிறார்கள் என்பதே உண்மை.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

                                                         RASMIN M.I.Sc

0 கருத்துகள்:

கருத்துரையிடுக